பெரம்பலூர், ஜூலை 10: பெரம்பலூர் அருகே மினி லாரியில் கடத்தி சென்ற 1800 கிலோ ரேசன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி (சிஎஸ்சிஐடி) குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையின் பெரம்பலூர் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் (பொ) கண்ணதாசன், பெரம்பலூர் ஏட்டுகள் சுரேஷ்குமார், ராஜவேல் ஆகியோருடன் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, ரேசன் அரிசியை பேரளிரோட்டில், ஒரு சரக்கு வாகனத்தில் கடத்தி செல்வதாக மர்ம நபர் ஒருவர் போனில் தெரிவித்துள்ளார். இதன் பேரில் எஸ்ஐ கண்ணதாசன், ஏட்டுகள் சுரேஷ்குமார், ராஜவேல் ஆகியோருடன் புறப்பட்டு, பெரம்ப லூர் நான்கு ரோட்டிற்கு வந்து அங்கிருந்த, குன்னம் வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், அவரது உத வியாளர் அருள்முருகன், குன்னம் தனி வருவாய் ஆய்வாளர் ஏகாம்பரம் மற்றும் பேரளி கிராம உதவியாளர் பெரியசாமி ஆகியோரை சந்தித்தனர்.
அப்போது வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் மேற்படி விஷயத்தை உறுதிப்படுத்தியதால், எஸ்ஐ கண்ணதாசன், குன்னம் வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் நேற்று காலை 10.30 மணிக்கு பேரளி ரோட்டில், மருவத்தூர் பிரிவு ரோட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது, ரோட்டின் ஓரத்தில் ரகசிய நபர் சொன்ன அடையாளத்துடன் ஒரு நான்கு சக்கர சரக்கு வாகனம் நின்று கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோது, டிரைவர் திடைரென இறங்கி தப்பி ஓடினார். போலீசார் தூரம் துரத்திச் சென்றும் அந்த நபரை பிடிக்க முடியவில்லை. பின்னர் சம்பவ இடமான பேரளியில் உள்ள மருவத்தூர் பிரிவு ரோட்டிற்கு வந்து குன்னம் வட்ட வழங்கல் அலுவலர் சீனிவா சன் உள்ளிட்டோர் முன்னிலையில், அந்த வாகனத்தை சோதனையிட்டதில் தலா 40 கிலோ எடை கொண்ட 45 சாக்கு பைகளில் மொத்தம் 1800 கிலோ ரேசன் அரிசி இருந்ததை கைப்பற்றினர். இது தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை எஸ்ஐ கண்ணதாசன் வழக்குப் பதிவு செய்து ரேசன் அரிசியை கடத்திய நபர் யார், அரிசி எங்கு கொண்டு செல்லப்படுகிறது என தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.
The post பொதுமக்கள் எதிர்பார்ப்பு பெரம்பலூர் அருகே 1800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.