சென்னை: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சியினர் நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, பாஜ அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து கோஷம் எழுப்பினர். மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கு தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னையில் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ மற்றும் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்று, வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரில் பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் முன்னிலை வகித்தார். திமுக பகுதி செயலாளர்கள் ஜெயராமன், முருகன் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வண்ணராப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ரங்கராஜன் தலைமை வகித்தார். சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இளைய அருணா, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன், திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் மருதுகணேஷ், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ஷிப்பிங் ஜெ.டில்லி பாபு மற்றும் கூட்டணி கட்சியினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சேகர்பாபு எல்எல்ஏ முன்னிலை வகித்தார். திமுக எம்எல்ஏக்கள் ரங்கநாதன், தாயகம் கவி, ரவிச்சந்திரன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ ராஜசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்வம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் திருவொற்றியூர் தேரடியில் உள்ள தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடசென்னை நாடாளுமன்ற எம்பி கலாநிதி வீராசாமி முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர்கள் கே.பி.சங்கர், தனியரசு, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மார்க்சிஸ்ட் நிர்வாகி ஜெயராமன், திமுக மீனவரணி செயலாளர் பத்மநாபன் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதேபோல் சென்னை முழுவதும் 27 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து, மின்வாரிய ஊழியர்கள் என 40,000 பேர் பங்கேற்றனர்.