போச்சம்பள்ளி, ஏப்.9: போச்சம்பள்ளி அருகே, தொப்படிகுப்பபம் மலைமேல் அமைந்துள்ள பழமை வாய்ந்த பெருமாளப்பன் கோவில் உள்ளது. இக்கோயிலில் 10 வருடங்களுக்கு பிறகு திருவிழா கடந்த வாரம் கொடி ஏற்றி விழா துவங்கியது. நேற்று முன்தினம், எம்.ஜி அள்ளியிலிருந்து பெருமாள் சுவாமி சிலையை மேளதாளங்கள் முழங்க எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து, இரவு வாணவேடிக்கை மற்றும் கிருஷ்ணன் பிறப்பு நாடகம் நடந்தது. நேற்று காலை விளக்கு ஏற்றப்பட்டு, பெருமாளப்பனுக்கு படி கொடுத்து அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர். விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
The post பெருமாளப்பன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.