பெரியபாளையம் அருகே சேதமடைந்துள்ள ரேஷன் கடை: சீரமைக்க கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை, நவ. 6: பெரியபாளையம் அருகே பனையஞ்சேரி கிராமத்தில் பழுதாகி ஆபத்து நிலையில் இருக்கும் ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே பனையஞ்சேரி ஊராட்சியில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள ஊராட்சி அலுவலகம் அருகில் 40 வருடங்கள் பழமை வாய்ந்த ரேஷன் கடை கட்டிடம் உள்ளது.

இந்த கடையில் பனையஞ்சேரி, பனையஞ்சேரி காலனி மற்றும் எம்.என். சத்திரம் பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள், அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகிய பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில், இந்த ரேஷன் கடை கட்டிடத்தின் மேல்தளம் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளதால், மழைக் காலங்களில் மழைநீர் கடைக்குள்ளேயே ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ரேஷன் பொருட்கள் நனைகிறது. எனவே சேதமடைந்த ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும் அல்லது வேறு இடத்தில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் எனவும், எம்.என். சத்திரத்திற்கும் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தரவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையம் அருகே சேதமடைந்துள்ள ரேஷன் கடை: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: