சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட சட்டமன்ற தொகுதி கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால், அமைச்சர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட செயலாளரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைச்சரானவர் பாஸ்கரன். தற்போது சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் எம்பி செந்தில்நாதன் கடந்த 6 ஆண்டாக உள்ளார். அமைச்சர் பாஸ்கரன் வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம் என்ற உளவுத்துறை தகவலால், தனக்கு பதில் மகன் கருணாகரனை (மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்) களமிறக்குவதற்காக, தொகுதியில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அழைத்துச் சென்றார். தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டு, தானே போட்டியிட முடிவு செய்து சீட் கேட்டு போராடி வருகிறார் பாஸ்கரன்.
அதிமுக மாவட்ட செயலாளரான செந்தில்நாதன் காரைக்குடி தொகுதியை தருமாறு கேட்டு வருகிறார். அதே நேரம் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜாவை, காரைக்குடி தொகுதியில் போட்டியிடுமாறு தலைமை அறிவுறுத்தியதாக தகவல்கள் பரவுகின்றன. மேலிட செல்வாக்கால் இவருக்கே தொகுதியை தர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. திருப்பத்தூர் தொகுதியை அதிமுக பிரமுகரான மருதுஅழகுராஜ் குறி வைத்து தொகுதியில் வலம் வருகிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில்நாதன், காரைக்குடி தொகுதி கிடைக்க வாய்ப்பில்லை எனக்கருதி சிவகங்கை தொகுதியை தனக்கு வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி வருகிறார். இதையறிந்த அமைச்சர் பாஸ்கரன், தனக்கே வழங்க வேண்டும் என மேலிடத்தில் வலியுறுத்தி வருகிறார். மேலும் சிவகங்கை தொகுதியை அமைச்சர் என்ற முறையில் தனக்கே கிடைக்க வேண்டும். அது மட்டுமல்ல... செந்தில்நாதனுக்கு மாவட்டத்தில் வேறு எந்த தொகுதியும் கிடைக்கக்கூடாது என்பதற்காகவும் உள்ளடி வேலை செய்து வருகிறாராம். இதனால் இருவரிடையே பனிப்போர் வலுத்துள்ளதாம். யார் போட்டியிட்டாலும் ஒருவரை ஒருவர் காலை வாரி விட உள்குத்து நடக்கப்போவது உறுதி என அதிமுகவினர் புலம்பி வருகின்றனர்.