நவம்” என்ற சொல்லுக்கு “புதுமை” என்றும் பொருளுண்டு. நவராத்திரியில் புதிய பொம்மை ஒன்றையேனும் ஆண்டுதோறும் சேர்த்து கொலுவைத்து வழிபடுவதும் புதுமையை வேண்டுவதும் மரபாக உள்ளது. நவராத்திரி என்றாலேயே அம்மனை ஒன்பது நாட்கள் வழிபடுவோம். ஆனால், உலகிலேயே ஒரே இடத்தில் மட்டும்தான் புதுமையாக 12 நாட்கள் நவராத்திரி கொண்டாடுகிறார்கள். இந்தப் புதுமை நடைபெறும் திருத்தலம் கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள கோவிந்தனூர் என்ற கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருத்தலமாகும்.இந்தப் புதுமை இங்கு மட்டும்தான் அரங்கேறுகிறது. 12 நாட்களும் 12 வகை அலங்காரங்கள், பலவகையான பிரசாதங்கள் என கொண்டாட்டமும் குதூகலமும் பொங்கும் இவ்விழாவில் நாள்தோறும் இயல், இசை, நாடகமென பல கலை நிகழ்ச்சிகளும் கலைகட்டுகின்றன.இவ்வழிபாட்டில் மாபெரும் அற்புதம் நடக்கிறது. பன்னிரு நாட்களும் இரவுநேர சிறப்பு பூஜையின் நிறைவில் திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் தங்களின் மனத்துக்கேற்ற நல்லதொரு மணவாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக பரிகார வழிபாடு செய்கிறார்கள். ஒரு தட்டில் உரிக்காத ஒரு முழுத் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு மற்றும் எலுமிச்சைக்கனி ஆகியவற்றுடன் தங்களால் இயன்ற காணிக்கையை வைத்து, 11 தம்பதிகளுக்கு இன்னார் இனியார் என்று பாராமல் அவர்களிடத்தில் அந்தத் தட்டை கொடுத்து அவர்களின் பாதத்தில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறுகிறார்கள். இப்படி வாழ்த்து பெறுவதால் அடுத்த ஆண்டு நவராத்திரி வழிபாட்டுக்குள் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதேபோல திருமணமும் நடக்கிறது.இதில் சிறப்பு என்னவென்றால் ஆசிர்வதிக்கும் தம்பதிகள் அனைவரும் இன்னார் இனியார் என்று பாராது ஏற்றத்தாழ்வு பாராது வயதில் மூத்தவராக இருக்கும் பெரியோர்களிடம் ஆசி பெறுகிறார்கள். சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து இவ்வழிபாடு இருக்கிறது. அப்படி ஆசிர்வாதம் பெற்று பரிகார வழிபாட்டை செய்த அனைவரும் அடுத்த ஆண்டுக்குள் திருமணமாகி அடுத்த ஆண்டே தம்பதிகளாக இருவரும் சேர்ந்து நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்கள் நன்றியை தெரிவித்து மகிழ்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இங்கே வைக்கப்படும் கொலுவில் குழந்தைப்பேறு வேண்டுவோர் குழந்தை பொம்மையும், செல்வம் வேண்டுவோர் திருமகளின் பொம்மையையும், கல்விச் செல்வம் வேண்டுவோர் கலைமகள் பொம்மையையும் தொழில்மேன்மை வேண்டுவோர் தத்தம் தொழில் சார்ந்த பொம்மைகளையும் வைத்து வழிபாடு செய்கிறார்கள்.முழுமனதுடன் வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு வாழ்வில் புதிய முன்னேற்றத்தை வழங்கும் இந்த அம்மனின் திருநாமம் பத்ரகாளி. ஆனால், வழிபாட்டிற்கு இவள் சார்ந்த சொரூபிணி. அதனால்தான் இத்திருக்கோவில் வளாகத்திலேயே பலியிடுவது என்பது தடை செய்யப்பட்டுள்ளது. திருமண வரத்தையும் வேண்டும் வரங்களையும் அருளும் இந்த அம்மனை வாழ்வில் ஒரு முறையேனும் கண்டு தரிசிக்க வேண்டும்….
The post புதுமை நவராத்திரி appeared first on Dinakaran.