×

புதுகை கவிநாடு மேற்கு, போஸ்நகர் திட்டப்பகுதிகளில் ரூ.53.44 கோடியில் கட்டப்பட்ட 576 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்

புதுக்கோட்டை, மே 21: புதுக்கோட்டை மாவட்டம், கவிநாடு மேற்கு மற்றும் போஸ்நகர் திட்டப் பகுதிகளில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா கலந்துகொண்டார். பின்னர், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடும் வகையில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில், பொதுமக்களுக்கு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.527.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.207.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வணிக வளாகங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அதில், புதுக்கோட்டை மாநகராட்சி, கவிநாடு மேற்கு திட்டப் பகுதியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தரை மற்றும் மூன்று தளங்களுடன் 432 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் போஸ்நகர் திட்டப் பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளும் என சந்தைபேட்டை திட்டப்பகுதியில் ரூ.53.44 கோடி செலவில் கட்டப்பட்ட 576 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டன.

இக்குடியிருப்புகளில், ஒவ்வொரு குடியிருப்பும், வசிப்பறை, சமையலறை, படுக்கையறை, பயன்பாட்டு அறை, குளியலறை மற்றும் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்புகளுக்கு போதுமான காற்றோட்ட வசதி, தண்ணீர் வசதி, ஆழ்துளை கிணறுகள், கீழ்நிலை தண்ணீர் தொட்டிகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், மழைநீர் சேகரிப்பு தொட்டி மற்றும் பேவர் பிளாக் நடைபாதை ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார். இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி, அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post புதுகை கவிநாடு மேற்கு, போஸ்நகர் திட்டப்பகுதிகளில் ரூ.53.44 கோடியில் கட்டப்பட்ட 576 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Tamil ,Nadu ,Chief Minister ,Kavinad West ,Bosenagar ,Pudukkottai district ,Tamil Nadu Urban Habitat Development Board ,Secretariat ,M.K. Stalin ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...