×

புதிய தாய்சேய் நல மையம்

தர்மபுரி, மே 6: பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் ₹12 கோடி மதிப்பீட்டில் புதிய தாய்சேய் நல மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு தாலுகா மருத்துவமனையில் இருந்து, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு தீவிர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, பச்சிளங்குழந்தைகள் பிரிவு, எக்ஸ்ரே பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், சித்த மருத்துவ பிரிவு, உள் மற்றும் புற நோயாளிகள் பிரிவு என 20க்கும் மேற்பட்ட பிரிவு வசதிகள் கொண்டவையாக இயங்கி வருகின்றன. இந்த அரசு மருத்துவமனைக்கு பென்னாகரம், ஒகேனக்கல், கூத்தப்பாடி, மடம், பருவதனஅள்ளி, சாலைகுள்ளாத்திரம்பட்டி, பெரும்பாலை, வண்ணாத்திப்பட்டி, ஏரியூர், நெருப்பூர், முடிச்சூர், செல்லமுடி மற்றும் பென்னாகரம் தாலுகாவின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள், பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்து செல்கின்றனர்.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதுதவிர, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 100 முதல் 120 பிரசவங்கள் நடக்கிறது. இம்மருத்துவமனைக்கு வனக்கிராமம் மற்றும் மலைக்கிராமங்களை சேர்ந்த மக்கள் தான், அதிக அளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனையில் அனைத்து மருத்துவ வசதிகளுடன், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பிரசவத்திற்கு கர்ப்பிணி தாய்மார்கள் வருகை அதிகரிப்பால், தாய்சேய் நல வார்டை விரிவாக்கம் செய்து, தனியாக கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நோயாளிகள், பென்னாகரம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, தமிழக அரசு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், ₹12 கோடியில் தாய் சேய் நல மையம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் வாரத்தில் பூமி பூஜை நடக்கவுள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட மருத்துவநலப்பணிகள் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், பிரசவங்கள் அதிகம் நடப்பதால், தாய்சேய் நல வார்டை விரிவாக்கம் செய்ய அரசு ₹12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பென்னாகரம் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே, 4 மாடியில் ₹12 கோடி மதிப்பீட்டில், அனைத்து வசதிகளும் கொண்ட தாய்சேய் நல மையம் அமையவுள்ளது. இதற்காக பூமி பூஜை விரைவில் நடக்க உள்ளது. இந்த தாய்சேய் நல மையத்தால் பிரசவித்த தாய்மார்களுக்கும், பிறக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கும் மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள் கிடைக்கும்,’ என்றனர்.

The post புதிய தாய்சேய் நல மையம் appeared first on Dinakaran.

Tags : New Mother Child Welfare Centre ,Dharmapuri ,New Mother Child Welfare Center ,Bennagaram Government Head Hospital ,Dinakaran ,
× RELATED வழக்குகள் நிலுவையில் உள்ளதால்...