×

புகழூர் நகராட்சி தலைவர் பெருமிதம் நிலக்கடலை வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்?

அரவக்குறிச்சி, மே 9: நிலக்கடலை பயிரில் நூற்புழுக்களால் ஏற்படும் காளஹஸ்தி மெலடி மற்றும் நிலக்கடலையில் உண்டாகும் சொறி போன்ற பாதிப்புக்களைக் குறைக்க, மண் அணைத்தல் மற்றும் ஜிப்சம் இடுதல் ஆகியவற்றை கடைபிடித்து நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் பயன்பெறலாம் என்று வேளாண்துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கரூர் மாவட்டம் வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: நிலக்கடலை பயிரில் மண் அணைத்தல் ஒரு முக்கியமான செயல்பாடாகும். விதைக்கப்பட்ட நிலக்கடலையில் தற்போது மண் அணைக்க ஏற்ற காலமாகும். இரண்டாவது களை எடுத்த பின்பு மண் அணைக்க வேண்டும். நிலக்கடலை விதைத்த 40 முதல் 45 நாட்களுக்குள் இதை செய்ய வேண்டும், ஏனெனில் இது மண்ணில் விழுதுகள் ஊடுருவிச் செல்லவும், அதிக காய்கள் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

மண் அணைத்தல் செடி நிலைப்பதற்கு ஒரு ஊடகமாக பயன்படும். நீண்ட கைப்பிடி கொண்ட மண்வெட்டி பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. விதைத்த 45ம் நாளுக்கு பிறகு மண்ணில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது. ஜிப்சம் பயன்பாடு, கால்சியம் முக்கியமாக காய் மற்றும் விதை வளர்ச்சிக்காகவே தேவைப்படுகின்றது. நிலக்கடலையில் அதிக மகசூல் மற்றும் தரம் பெற நல்ல ஊட்டச்சத்து தேவை. கால்சியம் குறைபாட்டினால் காய்கள் அழுகல் மற்றும் \”பாப்ஸ்\” என்று அழைக்கப்படும் நிரப்பப்படாத பொக்கு காய்கள் அதிக அளவில் உண்டாகிறது. ஜிப்சம் பயன்பாடு மிகவும் முக்கியமானது. இதில் கால்சியம் மற்றும் சல்பர் உள்ளது.

அதிக எடையுடன் கூடிய தடிமனான காய்களின் வளர்ச்சிக்கு கால்சியம் உதவுகிறது. சல்பர் பருப்பில் உள்ள எண்ணெய் உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது. எனவே, ஜிப்சம் நிலக்கடலையில் பூக்க ஆரம்பிக்கும் தருணத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஜிப்சத்தில் உள்ள கால்சியத்தின் காரணமாக நிலக்கடலை பூக்களிலிருந்து விழுதுகள் மண்ணின் வழியாக எளிதாக ஊடுருவிச் செல்லும். ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் விதைத்த 40 முதல் 45வது நாளில் இட்டு, மண் அணைக்க வேண்டும்.

பாசனப் பயிருக்கு ஒரு எக்டருக்கு 40 முதல் 45வது நாளில் 400 கிலோ வீதம் ஜிப்சம் இடவேண்டும். மானாவாரி பயிருக்கும் 40 முதல் 75வது நாளில் செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து ஜிப்சம் இடவேண்டும். மண்ணைக் கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்கவேண்டும். கால்சியம் மற்றும் கந்தகக் குறைபாடுள்ள நிலங்களில் ஜிப்சம் இடுதல் நல்ல பலனைத் தரும். ஜிப்சத்தின் மொத்த அளவில் பாதியை ரசாயன உரங்களுடன் அடியுரமாக இடுவதால் மானாவாரி மற்றும் இறவைப்பயிரில் நூற்புழுக்களால் ஏற்படும் காளஹஸ்தி மெலடி மற்றும் நிலக்கடலையில் உண்டாகும் சொறி போன்ற பாதிப்புக்களைக் குறைக்க முடியும்.

The post புகழூர் நகராட்சி தலைவர் பெருமிதம் நிலக்கடலை வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்? appeared first on Dinakaran.

Tags : Bukashur Municipality ,Aravakurichi ,Bukazhur ,Municipal ,Perumitha ,Dinakaran ,
× RELATED அரவக்குறிச்சி பகுதி ரேஷன் கடைகளில்...