தலைநகரில் ஜூன் 16ம் தேதி வரை மலேரியா பாதிப்பு 29 ஆக அதிகரிப்பு

* டெங்கு 24, சிக்குன்குனியா 14

* மாநகராட்சி புள்ளிவிவரம் தகவல்

புதுடெல்லி: தலைநகரில் இந்த சீசனில் மேலும் 5 பேருக்கு மலேரியா நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த நோய் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று டெங்கு நோய் பாதிப்பு எண்ணிக்கையும் 24 ஆக அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் கோடைக்காலம் முடிந்ததும் தலைநகரில், கொசு மூலம் பரவும் தொற்று நோய்களான டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மலேரியா ஆகியவற்றின் அறிகுறி துவங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே தொற்று நோய்களின் பாதிப்பு தொடங்கியுள்ளது. எப்போதும் ஜூலை துவங்கி நவம்பர் வரை இருந்து வரும் இந்த நோய் தாக்கம், இந்த ஆண்டு டிசம்பர் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இந்த சீசனில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை ஏற்கனவே 23 ஆக இருந்த நிலையில் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கடந்த 16ம் தேதி வரை டெங்கு பாதிப்பு 24 ஆக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் சிக்குன் குனியா பாதிப்பு எண்ணிக்கை 14 என்கிற அளவில் பதிவாகியுள்ளது. மலேரியாவை பொறுத்தவரை, நோய் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதில் கடந்த மாதம் மட்டும் 17 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் ஜூன் மாதம் 8 பேரும், ஏப்ரல் மற்றும் மார்ச்சில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டனர். டெங்கு பாதிப்பை பொறுத்தவரை, 24 ஆக உயர்ந்தள்ளது. இதில், ஜனவரியில் 6 பேரும், பிப்ரவரியில் 3 பேரும், மார்ச்சில் ஒருவர், ஏப்ரலில் 2 பேர் மற்றும் கடந்த மாதம் இருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, கொசு உற்பத்தி காரணிகள் உள்ள இடங்கள் என 33,622 வீடுகள் கடந்த 16ம் தேதி வரை கண்காணிப்பு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். பல்வேறு விதிமுறைகள் பின்பற்றவில்லை என 39,699  வக்கீல் நோட்டீசுகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் கவர்னர் அனில் பைஜால், நோய் பரவல் குறித்து போர்கால அடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். குறிப்பாக, உள்ளூர் மொழியில் விழிப்புணர்வு வாசங்கள் இடம்பெற வேண்டும் என்றும், இதுபோன்ற முகாம்களில் பள்ளி மாணவர்களை இடம் பெற செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.

கடந்த ஆண்டு டெங்கு பாதிப்பு காரணமாக டெல்லியை சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி டெங்கு பாதிப்பு காரணமாக 12 வயது சிறுவன் உயிரிழந்ததே முதல் உயிரிழப்பாக மாநகராட்சி பதிவு செய்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: