திருவாரூர், மார்ச் 2: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொது தேர்வினை மொத்தம் 12 ஆயிரத்து 235 பேர்கள் எழுதிய நிலையில் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார். தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வானது நேற்று முதல் துவங்கியுள்ளது. இதனையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் தேர்வினை நடத்துவதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுதுவதற்கு 5 ஆயிரத்து 580 மாணவர்கள், 6 ஆயிரத்து 913 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 493 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் இவர்களுக்காக 56 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. இதனையொட்டி திருவாரூர் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது, மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 12 ஆயிரத்து 493 மாணவ,மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 5 ஆயிரத்து 436 மாணவர்களும், 6 ஆயிரத்து 799 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 235 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இத்தேர்வுப்பணிக்கு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் போதுமான அளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இத்தேர்வு கண்காணிப்பு பணியில் 112 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 5 பறக்கும் படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வுகளில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, தாசில்தார் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post பிளஸ் 2 பொதுத் தேர்வு: புலிவலம் அரசு பள்ளியில் திருவாரூர் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.