நெய்வேலி, அக். 28: நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 20ல் வசித்து வந்தவர் கண்ணன் (56). நெய்வேலி சூப்பர் பசாரில் பிரியாணி கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். நெய்வேலி நீதிமன்ற வளாகம் எதிரில் சென்றபோது அவர்மீது திடீரென மர்ம நபர்கள் கற்களை வீசி உள்ளனர். உடனே கண்ணன் வண்டியை நிறுத்திவிட்டு பார்ப்பதற்குள் மர்ம நபர்கள் கண்ணனை சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் கொலையில் ஈடுபட்டதாக தெரிகிறது. சம்பவ இடத்தை கடலூர் எஸ்பி ராஜாராம், நெய்வேலி டிஎஸ்பி ராஜ்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
நெய்வேலி தெர்மல் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்த சல்மான்கான் (22), எழில் (23) ஆகிய இருவர் கண்ணனின் ஓட்டலுக்கு வந்து பிரியாணியை கடனாக கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரம் கழித்து 2 பேரும் வந்து கண்ணனை கத்தியால் வெட்டி உள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் அப்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது அவர்கள் ஜாமீனில் வெளிவந்து உள்ளனர். அவர்கள் இருவரையும் தெர்மல் போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் அவர்கள்தான் இந்த கொலையை கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்தார்களா? அல்லது வேறு கும்பல் இதில் ஈடுபட்டதா? என தெரியவரும். இது தவிர தப்பியோடிய 3க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக மேலும் 2 பேரிடம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நெய்வேலியில் ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
The post பிரியாணி கடை உரிமையாளர் கொலையில் 2 வாலிபர் சிக்கினர் போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.