பாலம் கட்டும் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் தொழிலாளர் விழுந்து பலி: முன்னறிவிப்பு பலகை இல்லாததால் காவு வாங்கிய அவலம்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே வடமதுரை பகுதியில் கால்வாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் முன்னறிவிப்பு பலகை வைக்காததால் தொழிலாளி விழுந்து பரிதாபமாக பலியானார். பெரியபாளையம் அடுத்த ஆரணி ஜி.என் செட்டி பகுதியில் வசித்து வந்தவர் வினோத்குமார் (30). தாமரைப்பாகத்தில் ஒரு தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைசர். இவரது மனைவி பவானி (28). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. 5 வயது மகன் மற்றும் 5 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், வினோத்குமார் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவு ஆரணியில் உள்ள தனது வீட்டிற்கு சுமார் இரவு 10 மணிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.   பெரியபாளையம் தாமரைப்பாக்கம் சாலையின் இடையே  வடமதுரை பகுதியில் வந்தபோது அந்த பகுதி இருளாக இருந்ததாலும், அங்கு எந்த வித முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகை ஏதும் இல்லாததாலும், அங்கு சிறு பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பெய்த மழையால் அந்த இடத்தில் குளம் போல்  தேங்கி இருந்துள்ளது. வேகமாக வந்த வினோத்குமார்  எதிர்பாராதவிதமாக பைக்குடன் அந்த கால்வாயில் கான்கிரேட் கம்பியில் விழுந்துள்ளார். இதில் உடம்பு முழுவதம் கம்பிகளால் குத்தி படுகாயம் அடைந்ததுடன் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த விநோத்குமார் கத்திக் கூச்சலிட்டுள்ளார். எப்படியாவது தப்பிக்க வேண்டும் என  முயற்சி செய்துள்ளார். அவரின்அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டனர்.  அந்த பகுதி முழுவதும் வெளிச்சமின்றி இருளாக கிடந்ததால் எவ்வளவு முயற்சி எடுத்தும் மக்களால் அவரை மீட்க முடியவில்லை. தகவலறிந்த, பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்னிஷவரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் தேர்வாய் கண்டிகை சிப்காட் தீயணைப்புத்துறை வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். இதில் ஒரு மணி நேரம் போராடி வினோத் குமார் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். முன்னறிவிப்பு பலகை இல்லாததால் காவு வாங்கிய பள்ளம் அதிகாரிகள் அலட்சியம் இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது, பெரியபாளையம் தாமரைப்பாக்கம் சாலையின் வடமதுரை பகுதியில் சாலை குறுக்கே சிறு பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை வழியாகதான் தாமரைப்பாக்கம், ஆவடி, திருவள்ளூர், பெரியபாளையம், ஆரணி  ஆகிய பகுதிகளுக்கு  கடந்து செல்ல வேண்டி சூழல்  உள்ளது. அப்படி உள்ள இந்த சாலையில் தெரு விளக்கு கிடையாது, பால பணிகள் நடைபெறுவதற்கான அறிவிப்பு பலகைகள் இல்லை, தடுப்பு சுவர்கள் இல்லை, பணியை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம்.இதனால் இந்த பாலம் பணிகள் நடைபெறும் இடத்திற்கு கடந்து செல்லும்போது விபத்துகள் அடிக்கடி நேர்வது வழக்கமாக உள்ளது. இதனால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் அறிவிப்பு பலகைகள் வேகத்தடை எச்சரிக்கை, பணிகள் நடக்கும் இடத்தில் முகப்பு விளக்கு மற்றும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.  மேலும், இது போன்ற  உயிர்ச்சேதம் நடக்காமல் இருக்க  இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும், போர் கால அடிப்படையில் செய்து தரவேண்டும்  என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post பாலம் கட்டும் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் தொழிலாளர் விழுந்து பலி: முன்னறிவிப்பு பலகை இல்லாததால் காவு வாங்கிய அவலம் appeared first on Dinakaran.

Related Stories: