கும்பகோணம், செப்.24: கும்பகோணம் அருகே பாபநாசத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஜெய் நகரில் வசித்து வருபவர் சுந்தர்ராமன். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கும்பகோணத்தில் உள்ள உறவினர் விட்டு சென்றிருந்தார். நேற்று முன்தினம் காலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ, கட்டில் உள்ளிட்டவை உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் அலங்கோலமாக சிதறிக்கிடந்தது.
இதில் அவர் வீட்டில் வைத்திருந்த வைரத்தோடு, மூக்குத்தி தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தர்ராமன் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாபநாசம் டிஎஸ்பி பூரணி, பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, எஸ்.ஐ குமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தஞ்சாவூரிலிருந்து சோழா என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தடயவியல் நிபுணர் கார்த்திகேயன் தடயங்களை பதிவு செய்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
The post பாபநாசத்தில் மர்மநபர்கள் கைவரிசை ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ. 5 லட்சம் நகை கொள்ளை appeared first on Dinakaran.