பழநி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள பக்தர்கள் தங்குமிடங்கள் பயன்பாட்டிற்கு வந்தது

பழநி, அக். 31: தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு நவம்பர் மாதம் துவங்கி மே மாதம் வரை 6 மாதங்களுக்கு ஐயப்ப பக்தர்கள் சீசன், தைப்பூசம் பங்குனி உத்திரம் மற்றும் கோடை விடுமுறை என பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் கூட்டத்தில் காசு பார்க்க நினைக்கும் பலர் தங்களது வீடுகளை விடுதிகளாக மாற்றி விட்டனர். இங்கு எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி, அதிக கட்டணத்தில் வாடகைக்கு அறைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பக்தர்களை இதுபோன்ற பணம் வசூலிக்கும் கும்பல்களிடமிருந்த காப்பாற்றும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிழக்கு கிரிவீதியில் சுற்றுலா பஸ் நிலையம் அருகிலும், தெற்கு கிரிவீதியில் நாதஸ்வர பள்ளிக்கட்டிட வளாகத்திலும், மேற்கு கிரிவீதியில் வின்ச் நிலையம் எதிரிலும் பக்தர்கள் தங்குவதற்காக அறைகளும், குழுக்களாக தங்கும் வகையில் பெரிய அளவிலான ஹால்களும் கட்டப்பட்டுள்ளன.

இந்த ஹால்கள் தற்போது பூட்டி வைக்கப்பட்டிருந்தன. சீசன் துவங்க உள்ள நிலையில் பூட்டி வைக்கப்பட்டுள்ள ஹால்களை உடனடியாக திறந்து விட வேண்டுமென்று பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து நேற்று முன் தினம் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தங்குமிடங்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். கோயில் நிர்வாகத்தின் இந்நடவடிக்கை பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post பழநி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள பக்தர்கள் தங்குமிடங்கள் பயன்பாட்டிற்கு வந்தது appeared first on Dinakaran.

Related Stories: