பழநியில் காது கேளாதோர் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை

 

பழநி, நவ. 8: பழநி கோயிலின் சார்பில் இயங்கி வந்த காது கேளாதோர் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி கோயிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
பழநியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழிற்சாலைகளோ, வணிக நிறுவனங்களோ இல்லை.

எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் பணியில் அமர்த்தப்படும் தனியார் ஒப்பந்த பணியாளர்களில் 10% இடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கி தர வேண்டும். பழநி கோயிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வின்ச், ரோப்கார் ஆகியவற்றில் வழங்கப்படும் முன்னுரிமையை கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும். பழநி கோயிலின் சார்பில் செயல்பட்டு வந்த காது கேளாதோர் பள்ளி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.

இதனால் காது கேளாத குழந்தைகள் கல்வி பயில்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே, மூடப்பட்ட காது கோளாதோர் பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பாதயாத்திரை தங்குமிடங்களிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்க வேண்டும். பழநி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

The post பழநியில் காது கேளாதோர் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: