×

பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்ட கலெக்டர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் களஆய்வு

வந்தவாசி, நவ.22: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் 2வது நாளாக நேற்று வந்தவாசி அரசு மருத்துவமனையில் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு பணி மேற்கொண்டார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் வந்தவாசி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 2து நாளாக நேற்று கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் களஆய்வு செய்தார். அப்போது, வந்தவாசி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் ஆய்வு செய்து நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அங்கிருந்த நோயாளிகளிடம் சிகிச்சைகள் பற்றியும், அவர்களுக்கு அளிக்கப்படும் மருந்து, உணவு குறித்தும், மருந்துகளின் இருப்பு குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

பின்னர், கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து, மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். மேலும், காலை உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளின் விவரம் குறித்து கேட்டறிந்து உணவினை சுகாதாரமாகவும், தரமாகவும் சமைத்து வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார். பின்னர, புதிய பேருந்து நிலையத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்து பஸ்கள் வருகை குறித்து விபரங்களை கேட்டார். தனியார் பஸ்கள் வராதது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், செய்யாறு சப்- கலெக்டர் பல்லவி வர்மா, நகராட்சி தலைவர் எச்.ஜலால், தாசில்தார் பொன்னுசாமி, ஆணையாளர் சோனியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்ட கலெக்டர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் களஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Collector ,T. Bhaskara Pandian ,Vandavasi Government Hospital ,Vasi ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால்...