×

பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கும் பரவலாம். இந்தியா இதுவரை யாருக்கும் நோய் பாதிப்பு இல்லை : மத்திய அரசு

டெல்லி : பறவைக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வலசை வந்த பறவைகளால் இந்தியாவில் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகளுக்கு H5N8 வைரஸ் பாதிப்பால் பறவைக் காய்ச்சல் இருந்ததை அடுத்து, 40 ஆயிரம் கோழிகள் மற்றும் வாத்துக்கள் உயிருடன் புதைக்கப்பட்டன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் 10 மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்தன. இமாச்சல் பிரதேசத்தில் பறவைகள் உயிரிழந்ததால் குறிப்பிட்ட மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு எச்சரிக்கை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 4 மாநிலங்களுடன் சேர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் ஆகிய 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த நிலையில், மத்திய கால்நடை வளர்ப்பு, பால்வள மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பாலியன் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது,’ பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கும் பரவலாம். ஆனால் இந்தியாவில் இதுவரை யாருக்கும் பறவை காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை.அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளம், இமாச்சலம் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் இல்லை என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். உயிரிழந்த காகம், கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகளை எச்சரிக்கையுடன் அப்புறப்படுத்தவும் கோழி, வாத்து பண்ணைகளை தீவிரமாகக் கண்காணிக்குமாறும் எச்சரித்துள்ளோம். பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளை உண்பதால் H5N8 வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்பதற்கு நேரடியான ஆதாரங்கள் எதுவும் இல்லை,’ என்றார். …

The post பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கும் பரவலாம். இந்தியா இதுவரை யாருக்கும் நோய் பாதிப்பு இல்லை : மத்திய அரசு appeared first on Dinakaran.

Tags : India ,Central Govt. Delhi ,Union Minister ,Sanjeev Palyan ,Central Government ,
× RELATED இந்தியாவில் வாகன உற்பத்தியில்...