ஸ்ரீரங்கம் கோயிலில் சிறுமிக்கு திருமணம் மணமகன் ஐஏஎஸ் அதிகாரியா?

திருச்சி: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜூ மகன் காந்தி கண்ணன்(32). இவருக்கும் திருச்சி மாவட்டம் துறையூர் காமராஜர் நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் ஜூலை 5ம் தேதி(நேற்று) திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமணத்தை ரங்கத்தில் உள்ள ஒரு கோயிலில் நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. மணமக்கள் மற்றும் இருதரப்பு பெற்றோர், சில முக்கிய உறவினர்கள் மட்டும் நேற்று கோயிலுக்கு வந்திருந்தனர்.  இதற்கிடையில் சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கோயிலுக்கு வந்தனர். அப்போது திருமணம் முடிந்து, மணமக்கள் அங்கிருந்து கிளம்பி விட்டது தெரியவந்தது.

 மணப்பெண்ணின் பெற்றோரிடம் அதிகாரிகள் விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். மேலும் மணப்பெண்ணுக்கு 19 வயது முடிந்து விட்டது என்றும் கூறி உள்ளனர்.  சந்தேகமடைந்த அதிகாரிகள் மணப்பெண் படித்த பள்ளியை தொடர்பு கொண்டு, அவரது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை அனுப்பும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி மெயிலில் மதிப்பெண் சான்றிதழ் அனுப்பப்பட்டது. அதில் மணப்பெண்ணுக்கு 16 வயது மட்டுமே என்பது உறுதியானது மணப்பெண்ணின் பிறந்த தேதி 31.12.1998 என்று மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் குழந்தை திருமணம் நடந்ததாகவும், இதற்கு காரணமான மணமக்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மணமகன் காந்தி கண்ணன், அவரது தாய் சரோஜா, மணப்பெண்ணின் தாய் ஜெயந்தி, உறவினர் ராஜகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜெயந்தியை மட்டும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதுபற்றி சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரி கூறுகையில், நான் கோயிலுக்கு சென்ற போது திருமணம் முடிந்து மணமக்கள் சென்னைக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர். விசாரணையில் மணப்பெண்ணுக்கு 16 வயது மட்டுமே ஆவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக சென்னை சென்றுள்ள மணமக்களை ரங்கம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணமகன் காந்தி தான் திருவள்ளூரில் டிஆர்ஓவாக இருப்பதாக பெண் வீட்டாரிடம் கூறி உள்ளார். அவர்களது உறவினர்கள் சிலரிடம் சென்னை தலைமை ெசயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது உண்மையா, அல்லது பொய் சொல்லி திருமணம் செய்து விட்டாரா என்பது அவர்களிடம் விசாரித்த பிறகே தெரியவரும் என்றார்.

மணப்பெண்ணின்  தந்தை ராஜப்பா உயிருடன் இருக்கும் போதே அவருக்கு லட்சக்கணக்கில் கடன்  இருந்தது. சமீபத்தில் அவர் மறைந்து விட்டநிலையில் கடனை செலுத்த முடியாமல்  மணப்பெண்ணின் தாய் ஜெயந்தி சிரமப்பட்டு வந்துள்ளார். எனவே ரூ.30 லட்சம் அளவு கடனை மணமகன் காந்தி கண்ணன் அடைத்துள்ளார். அதற்கு ஈடாக ஜெயந்திக்கு சொந்தமான வீட்டை தனது பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டார். அந்த பழக்கத்தில் ஜெயந்தியின் மகளையும் திருமணம் செய்து கொண்டார் என்று மணமகளின் உறவினர்கள் சிலர் கூறினர்.

கோயிலில் போலி சான்று அளிப்பு

பொதுவாக கோயிலில் திருமணம் நடத்த வேண்டும் என்றால் மணமக்களுக்கு அவர்கள் வசிக்கும் விஏஓக்களிடம் முதல்  திருமண சான்றிதழ் பெற்று கோயிலில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த சான்றிதழில் திருமணம் நடக்கப்போகும் நபரின் வயது குறிப்பிடப்பட்டிருக்கும். சிறுமிக்காக துறையூர் விஏஓவிடம் வாங்கிய சான்றிதழில், அவருக்கு 19 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விஏஓவிடம் போலி ஆவணம் அளித்து சான்றிதழில் கையெழுத்து வாங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: