பயிர்கள் பாதிப்பால் விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

சிவகங்கை, ஆக.2: பயிர்கள் பாதிப்பால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் போது விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் விவசாயத்தை மட்டுமே முக்கிய தொழிலாக கொண்டுள்ள பகுதியாகும். மொத்தமுள்ள 3 லட்சத்து 70ஆயிரம் எக்டேர் விவசாய நிலப்பரப்பில் கடந்த 10ஆண்டுகளில் சராசரியாக 1லட்சத்து 5ஆயிரம் எக்டேர் பரப்பில் மட்டுமே தொடர்ந்து விவசாயம் செய்யப்படுவதாக உள்ளது. இதில் கடந்த 5ஆண்டுகளாக சராசரியாக 70 ஆயிரம் எக்டேரில் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

விளைச்சல் இல்லாமல் வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்படுவது அல்லது கூடுதல் மழையால் பயிர்கள் அழுகிப் போவது தொடர்கதையாகி வருகிறது. பெரிய அளவில் வேறு எந்த தொழிலும், தொழிற்சாலையும் இல்லாத இப்பகுதியில் போதிய மழை இல்லாமை, காலம் தவறிய பருவ மழையால் பல ஆண்டுகளாக விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் விவசாயத்தை நம்பி மட்டுமே பல லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் சுமார் 2 லட்சம் பேர் உள்ளனர். விவசாய தொழிலாளர்கள் 4லட்சத்திற்கும் அதிகமாக உள்ளனர். இவர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உபதொழில்களில் மட்டுமே தினக்கூலிகளாக ஈடுபட்டு வருபவர்களாவர்.

குறைந்தது மாதத்திற்கு 20 நாட்களாவது வேலை இருந்தால் மட்டுமே அதில் கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்திற்கான செலவினங்களை செய்ய முடியும். ஆனால் விவசாய தொழிலில் ஆண்டுதோறும் தொடர்ந்து பல மாதங்களாக வேலை இல்லாமல் இருப்பதால் விவசாய தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் வறட்சி மற்றும் கூடுதல் மழையால் பயிர் பாதிப்பிற்குள்ளாகும் நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் போது விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் பாதிக்க தொடங்கிய நிலை தொடர்கிறது. ஆண்டுதோறும் ஒரே மாதிரியான விவசாயம் இருப்பதில்லை. இதனால் விவசாய வேலைகளில் அனுபவம் உள்ளவர்கள் வேலையின்றி கிடைத்த வேலைகளை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த வேலையும் நிரந்தரம் இல்லாமல் வெளி மாவட்டங்களில் பல்வேறு கூலி வேலைகளுக்கு செல்கின்றனர். எனவே பயிர் பாதிப்பின் போது விவசாய தொழிலாளர்களுக்கும் கட்டாயமாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post பயிர்கள் பாதிப்பால் விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: