நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வடமதுரை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

 

பெரியபாளையம், ஜூலை 10: வடமதுரை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த வடமதுரை கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று காலை அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக, சிவாச்சாரியார்கள் அக்னி குண்டம் அமைத்து கடந்த 3 நாட்களாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக பூஜை, உள்ளிட்ட பல்வேறு யாக கால சிறப்பு பூஜைகளை நடத்தினர். இதனை தொடர்ந்து, புதிய சிலை பிரதிஷ்டை, கண் திறத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவையும் நடைபெற்றன. இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடத்தி, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை, கோயிலை சுற்றி வலம் வந்து, பிறகு கோபுர கலசத்தின் மீது ஊற்றி அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடத்தினர்.

இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்ரமணிய சுவாமி விசேஷ அலங்காரத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை அடுத்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான பிரசாதம் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

The post நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வடமதுரை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: