நிழற்குடையில் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

 

முத்துப்பேட்டை, மே 28:திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியின் பழைய குப்பை கிடங்கு அருகில் உள்ள ஆலங்காடு வல்லம்பகாடு பேருந்து பயணிகள் கட்டிடத்தில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் தஞ்சம் புகுந்து அங்கேயே தங்கி வந்தார். உணவு ஏதும் சரிவர கிடைக்காததால் உடல் மெலிந்து பசி பட்டினியால் பரிதவித்து வருகிறார். அதனால் மூதாட்டியின் நலன் கருதி அவரை அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி கடந்த 26.05.2024ம் தேதி தினகரனின் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் சாரு உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வளர்ச்சி பணியாளர் கௌசல்யா, சமூக ஹப் கோகிலா, முத்துப்பேட்டை சமூக நலத்துறை அலுவலர் செல்வேஸ்வரி, கிராம நல அலுவலர் அம்சவள்ளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை மீட்டு முதலுதவி செய்து உணவு கொடுத்து 108ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தசெய்தியும் தினகரனில் வெளியானது. இதனை செய்தி வெளியிட்ட தினகரனை மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூதாட்டிக்கு நேற்று இரண்டாவது நாளாக உரிய சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று நேரில் சென்று சமூக நலத்துறை அலுவலர்கள் பார்த்தனர். மூதாட்டி யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் இன்னும் இரண்டொரு நாளில் நல்ல நிலைமைக்கு வந்ததும் காப்பகத்தில் சேர்த்து பராமரிக்கப்படும் என சமூக நலத்துறை அலுவலர்கள் கூறினர்.

The post நிழற்குடையில் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: