×

நில அளவீடு செய்ய ₹4500 லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் கைது

கண்டாச்சிபுரம், ஆக. 29: கண்டாச்சிபுரம் அருகே நில அளவீடு செய்ய ரூ.4500 லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா கொடுங்கால் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி(45). உரிமம் பெற்ற சர்வேயராக கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறார். இவரது உதவியாளராக முகையூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் சரத்குமார்(27) என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கண்டாச்சிபுரம் தாலுகா கஸ்பாகாரணை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் சுரேஷ் என்பவர் சித்தாமூர் கிராம எல்லையில் புதிதாக நிலம் வாங்கியதாகவும், அதற்கு நில அளவை செய்ய கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் நில அளவைக்கு உரிமம் பெற்ற தற்காலிக சர்வேயரை அனுகியுள்ளார். அதற்கு சர்வேயர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதையடுத்து சுரேஷ் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷிடம் கொடுத்து சர்வேயருக்கு கொடுக்க கூறியுள்ளனர். அதன்படி நேற்று மாலை சுரேஷ் சர்வேயர் ராமமூர்த்தியிடம் தொலைபேசி மூலம் அழைத்து பணம் கொடுக்க வர கூறியுள்ளார். அதில் ராமமூர்த்தியின் உதவியாளரும், இடைத்தரகரான சரத்குமாரிடம் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷ் கொடுத்துள்ளார். அதனை சரத்குமார் சர்வேயர் ராமமூர்த்தியிடம் கொடுக்கும்போது மறைந்திருந்த திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி(விழுப்புரம் கூடுதல் பொறுப்பு) திருவேல்முருகன் தலைமையிலான ஆய்வாளர் ஈஸ்வரி, உதவி ஆய்வாளர் சக்கரபாணி, கோபிநாத் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் கையும் களவுமாக பிடித்து சர்வேயர்டமிருந்து ரூ.4500 லஞ்ச பணத்தை கைப்பற்றினர். தொடர்ந்து லஞ்சம் பெற்ற சர்வேயர் ராமமூர்த்தி மற்றும் இடைதரகர் சரத்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.

The post நில அளவீடு செய்ய ₹4500 லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Kandachipuram ,Ramamurthy ,Kodungal village ,Kandachipuram taluk ,Villupuram district ,
× RELATED நில அளவீடு செய்ய லஞ்சம் வாங்கிய சர்வேயர் உதவியாளர் கைது