×

இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வட மாநில காதல் ஜோடி கடலூரில் திருமணம்

 

கடலூர், செப். 20: இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த வட மாநில காதல் ஜோடி கடலூரில் திருமணம் செய்து கொண்டனர். மேற்கு வங்க மாநிலம் மெகன்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர், காசித் கான் மகன் மலிக்கான் (24). இவர் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த விராலா பிரசாத் மகள் சுஷ்மிதா பால் (20) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளனர்.

இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி சுஷ்மிதாபால் அசாம் மாநிலத்தில் இருந்து கடலூர் வந்துள்ளார்.  இதன் பின்னர் கடந்த 1ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு, புதுப்பாளையத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். தனது மகளை காணாததால் விராலா பிரசாத் அசாம் மாநில போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சுஷ்மிதாபால் கடலூரில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அசாம் போலீசார் கடலூருக்கு வந்து புதுநகர் போலீசில் இது குறித்து தெரிவித்தனர். புதுநகர் போலீசார் மற்றும் அசாம் போலீசார் புதுப்பாளையத்திற்கு சென்று அங்கு இருந்த மலிக்கான் மற்றும் சுஷ்மிதா பாலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது சுஷ்மிதா பாலின் பெற்றோர் அவரை தங்களுடன் வந்துவிடுமாறு கூறினர். ஆனால் சுஷ்மிதாபால் தனது கணவருடன் தான் இருப்பேன் என்று திட்டவட்டமாக கூறினார். இதனால் போலீசார் சுஷ்மிதாபாலை கணவர் மலிக்கானுடன் அனுப்பி வைத்தனர்.

The post இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வட மாநில காதல் ஜோடி கடலூரில் திருமணம் appeared first on Dinakaran.

Tags : North ,Cuddalore ,Instagram ,Kasid Khan ,Malikan ,West Bengal ,Meganpur district ,Pudupalayam, Cuddalore ,
× RELATED புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது