புதுக்கோட்டை: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு சுற்றுலாவாக அருங்காட்சியகம், திருமயம் கோட்டை, சித்தன்னவாசல் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதற்கான சுற்றுலா பேருந்தை கலெக்டர் மெர்சி ரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், சுற்றுலாத்துறையின் சார்பில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பேருந்து வாகனத்தினை, மாவட்ட மெர்சி ரம்யா, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர், சுற்றுலாத்துறையின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, மாணவ, மாணவிகளுக்கு கல்வி சுற்றுலா போன்ற கல்வி சார்ந்த சுற்றுலாக்களையும் நடத்தி வருகிறார். அந்தவகையில் இன்றையதினம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பேருந்து வாகனம் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. அதன்டி, இலுப்பூர் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 50 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்ளும், ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா, அரசு அருங்காட்சியகம், திருமயம் கோட்டை, சித்தன்னவாசல் மற்றும் குடுமியான்மலை ஆகிய சுற்றுலா இடங்களுக்கு செல்வதற்கு சுற்றுலாத்துறையின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவ, மாணவிகள் அனைவரும் தாங்கள் புத்தகத்தில் படித்து வருவதை, நேரில் காணும் வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் தங்களது கல்விகளில் ஏற்படும் சந்தேகங்களை, நேரில் கண்டு தீர்வு காண வழிவகை ஏற்படும். எனவே மாணவ, மாணவிகள் அனைவரும், இந்த விழிப்புணர்வு சுற்றுலாவினை உரிய முறையில் பயன்படுத்தி கொண்டு, தங்களது கல்வியில் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும். இவ்வாறு கலெக்டர் மெர்சி ரம்யா, தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொ) முத்துச்சாமி, தலைமையாசிரியர் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post நிலத்தடி நீர்மட்டம் உயரும் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு சுற்றுலா பேருந்தை கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.