காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகன அணிவகுப்பு நடந்தது. இதனை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்,கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், கலெக்டர் கூறியதாவது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக பெண்கள் இருசக்கர வாகன அணிவகுப்பு நடக்கிறது. இதில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கி மூங்கில் மண்டபம், காந்தி சாலை, ரங்கசாமி குளம் மற்றும் கீரைமண்டபம் வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலக வளாக மைதானத்தில் முடிவடைகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டும். வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு விதிகளை மதித்து நடக்க வேண்டும். வாகனம் ஓட்டும் கலையை பெண்கள் பயின்றால், அவர்களது பணிகளுக்கு வேறு யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
