நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ₹32 கோடியில் மேம்பாட்டு பணிகள் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

நாகர்கோவில், ஆக.6 : நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.32 கோடியில், மேம்பாட்டு பணிகளை பிரதமர் இன்று வீடியோ கான்பரன்ஸ் முறையில் தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் வகையில் அம்ரித் பாரத் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் முதற்கட்டமாக 500 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட உள்ளன. இந்த பணிகளை பிரதமர் மோடி இன்று (6ம்தேதி) தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் கீழ், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலும் மேம்பாட்டு பணிகள் நடக்க இருக்கின்றன. சுமார் ரூ.32 கோடியில் பகுதி, பகுதியாக பணிகள் நடைபெற உள்ளன.

நவீன வசதிகளுடன் பிளாட்பாரங்கள், சிற்றுண்டி சாலைகள், ரயில் நிலையத்தை மக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் சிறப்பு பாதைகள், வாகன நிறுத்துமிடங்கள், ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கோச் தகவல் பலகைகள், பயணிகள் ஓய்வு அறை, பயணிகள் தங்கும் அறைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. ரயில் நிலையம் வர்ணம் பூசும் பணிகளும் தொடங்கி உள்ளன. ரயில் நிலையம் முன் அலங்கார வளைவு மற்றும் ரவுண்டானா அமைக்கப்படுகிறது.

இன்று காலை 9.30 மணிக்கு இந்த விழா தொடங்குகிறது. பிரதமர் வீடியோ கான்பரன்சிங் முறையில் தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த விழாவில் விஜய் வசந்த் எம்.பி., எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என கோட்ட மேலாளர் சர்மா கூறி உள்ளார். இதற்கான ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை அனைவரும் காணும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி. டி.வி.க்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

The post நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ₹32 கோடியில் மேம்பாட்டு பணிகள் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: