நத்தம், ஏப். 17: நத்தம் கோவில்பட்டி மேலத்தெரு பகவதி அம்மன் திருவிழா கடந்த ஏப்.8ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் காப்பு கட்டி பக்தர்கள் விரதம் துவங்கினர். தொடர்ந்து ஏப்.9ம் தேதி முதல் ஏப்.14ம் தேதி வரை மாலையில் கோயிலின் முன் கும்மி அடித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏப்.11ம் தேதி கோயிலின் முன் முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சென்று சந்தன கருப்பு சுவாமி கோயிலிலிருந்து கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்களை கோயிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
அன்றிரவு காக்கா குளத்தில் பகவதி அம்மன் பூக்கரகத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடனும் வாண வேடிக்கையுடன் கோயிலை சென்றடைந்தது. தொடர்ந்து பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்த நிலையில் கோயிலை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை பக்தர்கள் அக்னி சட்டி, சந்தனக்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் மாலையில் கருப்பு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து மாவிளக்கு எடுத்தனர். இன்று காலை பொங்கல் வைத்து அம்மனுக்கு கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். நாளை அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து நாளை மறுநாள் இரவு அம்மன் இருப்பிடம் போய் சேரும். இதற்கான ஏற்பாடுகளை நத்தம் கோவில்பட்டி மேலத்தெரு பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
The post நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.