நகரப்பகுதி மக்களுக்கான குடிநீர் திட்டம் போர்வெல் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய இளைஞர்கள்-வாகனத்தை கொளுத்திவிடுவதாக மிரட்டல்- ஊழியர்கள் ஓட்டம்

வில்லியனூர் : விரிவான குடிநீர் திட்டத்துக்காக போர்வெல் அமைக்கும் பணியை இளைஞர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வாகனத்தை கொளுத்தி விடுவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  புதுச்சேரியில் ஆண்டு தோறும் பெய்யக்கூடிய பருவமழையின் போது ஆறு, ஏரி மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதில் 90 சதவீதம் நீர் வீணாக கடலில் கலக்கிறது.  ஆற்றுப்படுகைகளில் கூடுதலாக படுகை அணை இல்லாததாலும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதாலும் மழைநீர் வீணாகிறது. புதுச்சேரியின் நகரப்பகுதிகள் மற்றும் நோணாங்குப்பம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், திருக்காஞ்சி உள்ளிட்ட பல பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு நீராகிவிட்டது. பெரும்பாலான பகுதியில் பொதுமக்கள் நல்ல குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.  இதையடுத்து  புதுச்சேரி அரசு, கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டு உதவியுடன் ரூ.523 கோடி மதிப்பீட்டில்  விரிவான குடிநீர் திட்டத்துக்கு, பிரான்ஸ் அரசு மேம்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்தது.  இதனை துரிதமாக செயல்படுத்த பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் இந்தியாவுக்கான இயக்குநர் புருனோ போஸ்லே தலைமையில் பிரெஞ்சு ஏஜென்சியான ஏஜென்சி ஃபிரான்கெய்ஸ் டி டெவலப்மென்ட் (ஏஎப்டி) அதிகாரிகளுடன் சில மாதங்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தாண்டு ஜூன் மாதத்தில் ஒப்பந்தம் காலாவதியாக உள்ளதால், ஒப்பந்தத்தை  2024 ஜூன் மாதம் வரை நீட்டிக்கவும் அப்போது ஒப்புக்கொண்டனர்.  இதற்கான தொகை 15 ஆண்டுகளில் 1.5 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்தப்படும். புதுச்சேரியின் நகரப்பகுதிகளில் உள்ள குடிநீரில் கரைந்துள்ள உப்புகளின் அளவு அதிகரித்துவிட்டது. 500 டிடிஎஸ் அளவுக்கு மேல் இருந்தால் குடிக்க உகந்த நீர் அல்ல.  ஆனால் பல இடங்களில் 1000 முதல் 2000 டிடிஎஸ் அளவை தாண்டிவிட்டது. எனவே, 150 போர்வெல்களை உடனடியாக மூடி, புதிய போர்வெல்கள் போட வேண்டும். தினசரி 90 மில்லியன் லிட்டர் வரை தற்போது தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, கிராமப்புறங்களில் 84 போர்வெல் அமைக்க திட்டமிடப்பட்டு சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவானது தேர்வு செய்யப்பட உள்ள இடத்தில்  மண் பரிசோதனை செய்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டது.  மீண்டும் நிலத்தடி நீர் ஆணையத்தின் பரிந்துரைகளை பின்பற்றி, ஆற்றுப்படுகைகளில் 50 புதிய போர்வெல்களை அமைப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி தென்பெண்ணையாறு மற்றும் மலட்டாறு மற்றும் குடுவையாறு ஆகிய படுகைகளில் பொதுப்பணித்துறை இடங்களைத் தேர்ந்தெடுத்து போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. வில்லியனூர் அடுத்த மேல்சாத்தமங்கலம் பகுதியில் உள்ள குடுவையாற்றின் படுகை பகுதியில் போர்வெல் அமைக்கும் பணி   கடந்த நான்கு நாட்களாக நடந்து வருகிறது. இதையறிந்த அப்பகுதி இளைஞர்கள் போர்வெல் அமைக்கும் வாகனத்தை முற்றுகையிட்டு  எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்களின் எதிர்ப்பினை கருத்தில் கொள்ளாமல் போர்வெல் அமைக்கும் பணியை நேற்று துவங்கினர். அப்போது அப்பகுதி இளைஞர்கள் ஆழ்குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட வாகனத்தை  கொளுத்திவிடுவோம் என பெட்ரோல் பாட்டிலுடன்  சென்று எச்சரித்தனர். இதனால் ஊழியர்கள் பணியை நிறுத்திவிட்டு வாகனத்தை அப்புறப்படுத்தனர்….

The post நகரப்பகுதி மக்களுக்கான குடிநீர் திட்டம் போர்வெல் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய இளைஞர்கள்-வாகனத்தை கொளுத்திவிடுவதாக மிரட்டல்- ஊழியர்கள் ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: