தூத்துக்குடி, ஆக. 1: அரசு பள்ளிகளில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட தனியார் தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியைகள் கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த ஆசிரியைகள் நேற்று திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆசிரியைகள், மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: ஆறுமுகநேரியில் செயல்படும் தொண்டு நிறுவனம் மூலம் மாவட்டத்தில் உள்ள எங்களைப் போன்ற சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக பணி அமர்த்தி உள்ளனர்.
எங்களுக்கு மாதம் ₹15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் எனக் கூறி ஒவ்வொரிடமும் இருந்து ₹3 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர். இந்நிலையில் எங்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து அந்நிறுவனத்திடம் சென்று கேட்டும் எங்களுக்கு எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் பள்ளி கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் இதில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசு பள்ளியில் ஆசிரியர் பணி என்ற பெயரில் மோசடி செய்த நிறுவனத்திடமிருந்து எங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். ஆசிரியர்களின் திடீர் தர்ணா போராட்டத்தால் கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை கேட்டு கலெக்டர் ஆபீசில் ஆசிரியர்கள் தர்ணா appeared first on Dinakaran.