திருப்போரூர், ஏப்.13: தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம்தேதி நடைபெறவுள்ளது. இந்த, தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் தங்களது பிரசாரங்களை செய்து வருகின்றனர். வருகிற வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 17ம்தேதி மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும், சட்டமன்ற தொகுதி வாரியாகவும், ஒன்றிய அளவிலும் தேர்தல் அலுவலகங்களை திறந்து செயல்பட்டு வருகின்றனர். காலையில் கட்சியினர் அலுவலகத்திற்கு வந்து அன்றைய தினம் பிரசாரம் செய்யும் இடங்கள் குறித்து ஆய்வு செய்து, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் தொகுதியில் பாமக சார்பில், திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் இதுவரை தேர்தல் அலுவலகம் திறக்கப்படவில்லை.
ஆனால், அதற்கான இடத்தை தேர்வு செய்து முன்பக்க பந்தல் அமைத்து விட்டனர். ஆனால், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அலுவலக அனுமதி, காவல்துறை அனுமதி போன்றவற்றை பெறாததால் தேர்தல் அலுவலகத்தை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1989ம் ஆண்டு முதல் பல்வேறு சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் பங்குபெற்ற பாமகவுக்கு தேர்தல் அலுவலகத்திற்கான அனுமதி வாங்கக்கூட தெரியாதா என பாஜவினர் கூறுகின்றனர். பாமக வேட்பாளராக இருப்பதால் தங்களால் தலையிட முடியவில்லை என பாஜவினர் தெரிவித்தனர்.
The post தேர்தல் அலுவலகம் திறக்க முடியாமல் பாமக திணறல்: அனுமதி வாங்காததால் சிக்கல் appeared first on Dinakaran.