தேர்ச்சி பெற்றால் ரூ.25 ஆயிரம் மாத ஊதியம் எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருவாரூர், ஆக. 7: திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின படித்த இளைஞர்கள் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான
பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியான சிஸ்டம்ஸ் அப்ளிகேசன்ஸ் அன்ட் புராடக்ஸ் இன் டேட்டா பிராசசிங், டேட்டா அனாலிட்டிக்ஸ், ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ், கிளவ்டு கம்ப்யூட்டிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங், அனிமேசன் சம்பந்தப்பட்ட பயிற்சியான மல்டிமீடியா அனிமேசன், 2 டைமன்சனல், 3 டைமன்சனல் மற்றும் அட்வான்ஸ் லெவல் டேலி என்டர்பிரைஸ் ரிசோர்ஸ் பிளானிங் அன்ட் அக்கவுண்டிங் சாப்ட்வேர் போன்ற பயிற்சிகளை முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்றுதர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியை பெற 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஒருபட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாக ரூ.15 ஆயிரம் -முதல் ரூ.25 ஆயிரம் -வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ நிறுவனம் வழங்கும். இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு நாகை பைபாஸ் ரோட்டில் இயங்கி வரும் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலும், 04366-250017 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பித்து மேற்குறிப்பிட்டுள்ள திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post தேர்ச்சி பெற்றால் ரூ.25 ஆயிரம் மாத ஊதியம் எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: