தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் குறைவு காற்றாலை மின் உற்பத்தி சரிவு சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதி

ஆண்டிபட்டி, ஆக. 24: தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி சரிந்துள்ளது. அதேநேரம் கோடை வெயில் போல தகிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கண்டமனூர், தேக்கம்பட்டி, காமாட்சிபுரம், கோவிந்தநகரம், மரிக்குண்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. பொதுவாக கேரளாவில் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது, தேனி மாவட்டத்தில் அதிகமாக காற்று வீசக்கூடும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் காற்று வீசும். இந்த காலக்கட்டத்தில் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி முழு அளவில் இருக்கும். அதிகபட்சமாக ஒரு காற்றாலையில் ஒருநாளைக்கு 38 ஆயிரம் யூனிட் வரையில் உற்பத்தி செய்ய முடியும்.

கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத் தொடங்கியதால் தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரையில் தேனி மாவட்டத்தில் சராசரியாக காற்றின் வேகம் வினாடிக்கு 13 மீட்டர் என்ற அளவில் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் வீசி வரும் காற்றின் வேகம் கிடுகிடுவென சரிந்துள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் வினாடிக்கு 9 மீட்டராக குறைந்து விட்டதால் காற்றாலையின் மின்சார உற்பத்தியும் சரிந்து ஒரு காற்றலையின் ஒருநாள் உற்பத்தி 11 ஆயிரம் யூனிட்டாக குறைந்துள்ளது. இந்த காற்றும் நள்ளிரவில் மட்டுமே வீசுவதாக காற்றாலைப் பணியாளர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில் பகல் நேரங்களில் கோடையை போல வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் குறைவு காற்றாலை மின் உற்பத்தி சரிவு சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: