தொடர் மழையால் மீண்டும் முளைத்த நெற்பயிர்கள் வேளாண்மை அலுவலகம் முற்றுகை: பரமக்குடி அருகே பரபரப்பு

பரமக்குடி,: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்தில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மீண்டும் முளைத்ததை கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்து, விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள நயினார்கோவில் ஒன்றியத்தில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல், மிளகாய், பருத்தி விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தொடர் மழையால் விவசாயம் முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது. மேமங்கலம், தாளையடிக்கோட்டை, சாலியவாகனபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மீண்டும் முளைத்துவிட்டன. ஒரு சில பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாமல் வயல்களில் தேங்கியதால் நெற்பயிர்கள் அழுகியுள்ளன.

பயிர்கள் பாதித்த விளைநிலங்களை அதிகாரிகள் பார்வையிட மறுப்பதுடன் இன்சூரன்ஸ் பதிய மறுக்கின்றனர். இதனால் இப்பகுதியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிலங்களில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. விவசாயிகளை கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்து மேமங்கலம், தாளையடிக்கோட்டை  உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழுகிய மற்றும் முளைத்த நெற்பயிர்களுடன், நயினார்கோவில் வேளாண் விரிவாக்க மையத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இன்சூரன்ஸ் வழங்க கோரி கோஷமிட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் அலட்சியமாக செயல்படும் பட்சத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூறினர். பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையால் நெல், மிளகாய் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: