சென்னை: தென்சென்னையில் போட்டியிட அதிமுக முன்னணியினர் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அக்கட்சியினர் கட்சி தலைமையிடம் புகார் அளித்தும் பலனில்லை. சீட் கிடைக்காத பெண்ணின் மகனும், மகளும் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் அதிமுக தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வந்தவர்களுக்கு சீட் வழங்கப்படாமல், லட்சக்கணக்கில் பணம் கொடுத்தவர்களுக்கே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மீது பலரும் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு புகார் அனுப்பி உள்ளனர். ஆனால், கட்சி தலைமையும் இதை கண்டுகொள்ளவில்லை. காரணம், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் தீவிர ஆதரவாளரான ஆதிராஜாராம் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள 111வது வார்டுக்கு கடந்த 2016ம் ஆண்டு போட்டியிட ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ஜி.காஞ்சனா ஜார்ஜ். 15 நாட்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். பின்னர் தேர்தல் நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதையடுத்து வருகிற 19ம் தேதி நடைபெறும் தேர்தலில் 111வது வார்டில் போட்டியிட கட்சி தலைமையிடம் காஞ்சனா ஜார்ஜ் கோரிக்கை வைத்தார். இவருக்கு தான் சீட் கிடைப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அவருக்கு சீட் வழங்கப்படாமல் கோகிலா கென்னடிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், தேர்தல் வாக்குப்பதிவு அன்று வாக்குப்பதிவை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளது.இதுகுறித்து ஜி.காஞ்சனா ஜார்ஜ் கூறியதாவது: எனது கணவர் ஜார்ஜ் ஆயிரம் விளக்கு பகுதி அதிமுக வட்ட செயலாளராக இருந்தார். இந்த நிலையில்தான் ஆதிராஜாராம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர், வந்தவுடன் எனது கணவரின் கட்சி பதவியை பறித்து விட்டார். பல்வேறு நடத்திட்டங்கள் செய்து வருகிறேன். ஆனால் எனக்கு சீட் கிடைக்கவில்லை. இதுபற்றி, ஆதிராஜாமிடம் எனது மகன் ஜான்சன், மகள் ஜெனிபருடன் நானும், எனது கணவரும் சென்று முறையிட்டோம். எனக்கு சீட் கிடைக்கவில்லை என்றால், அசிங்கமாகி விடும். தற்கொலை தான் செய்ய வேண்டும் என்றோம். நீங்கள் செத்தா எனக்கு என்ன என்று கேட்டு உதாசீனப்படுத்தினார்.இதனால் அவமானம் அடைந்த எனது மகனும், மகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருந்து குடித்து விட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபற்றி கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோருக்கு புகார் அனுப்பி இருந்தேன். ஆனால் அவர்களும் கண்டுகொள்ளவில்லை. எனக்கு சீட் கொடுக்காததால், ஆயிரம் விளக்கு பகுதி அதிமுகவினர் யாரும் அன்றையதினம் அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆதிராஜாராம் ஒவ்வொருவரிடமும் ரூ.10 லட்சம் முதல் 30 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார் என்றார்.சென்னை மாநகராட்சியின் 117வது வார்டுக்கு ஸ்ரீவித்யா போட்டியிட வாய்ப்பு கேட்டார். அவரிடமும் மாவட்ட செயலாளர் பணம் கேட்டதாக புகார் எழுந்தது. ஆனால், ஸ்ரீவித்யா அதிமுக மகளிர் அணி செயலாளர் வளர்மதி மூலம் வேலுமணியிடம் முறையிட்டு சீட் பெற்றுள்ளார். பழைய வேட்பாளர் பி.சின்னையன்(வார்டு 117) தவிர வேறு யாருக்கும் தென்சென்னையில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை என்று அதிமுக கட்சியினர் புலம்புகிறார்கள். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் அதிமுக தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வந்தவர்களுக்கு சீட் வழங்கப்படாமல், லட்சக்கணக்கில் பணம் கொடுத்தவர்களுக்கே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது….
The post தென்சென்னையில் போட்டியிட அதிமுக முன்னணியினர் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை: கட்சி தலைமையிடம் புகார் அளித்தும் பலனில்லை; 2 பேர் மருந்து குடித்து மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.