தூத்துக்குடி, ஏப். 25: தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடியில் உள்ள பிரசித்திப் பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் சிவன் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணிக்கு கொடி பட்டம் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
கோயிலில் கொடிமரம் முன்பு கும்ப பூஜை விக்னேஸ்வர பூஜை, விநாயகர் பூஜை மற்றும் சங்கர ராமேஸ்வரர் அன்னை பாகம் பிரியாள், சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றமும், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. கோயில் பிரதான பட்டர் செல்வம் பூஜைகளை நடத்தினார். கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் இன்பமணி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோட்டுராஜா, ஆறுமுகம், கந்தசாமி, சாந்தி சோமசுந்தரம் உட்பட பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், வருகிற 3ம் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
The post தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது appeared first on Dinakaran.