துறையூரில் பட்டப்பகலில் மளிகை கடையில் ₹3 லட்சம் திருட்டு

துறையூர், பிப்.27: துறையூரில் பட்டபகலில் மளிகை கடையில் ரூ.3 லட்சம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (46). இவர் துறையூர் ஆலமரம் பகுதியில் மளிகை மற்றும் பூஜை பொருட்கள் மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் வியாபார தேவைக்காக பாலக்கரை பகுதியில் உள்ள தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றிலிருந்து ரூ.3 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய கடைக்கு வந்தார். பின்னர் பணத்தை கடையில் உள்ள பீரோவில் வைத்துவிட்டு, கடையின் ஷட்டரை மூடிவிட்டு, பின்புறம் உள்ள அறையில் சாப்பிட சென்றார். பின்னர் மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபொழுது, கடையின் ஷட்டர் திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் உள்ளே சென்று பார்த்தார். அப்பொழுது பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக வெங்கடேசன் துறையூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூரில் பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post துறையூரில் பட்டப்பகலில் மளிகை கடையில் ₹3 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: