துப்பாக்கியால் சுட்டு மான் வேட்டையாடிய 4 பேர் கைது இறைச்சி பறிமுதல் வேப்பூர் செக்கடி காப்புக்காடு வனப்பகுதியில்

தண்டராம்பட்டு, ஆக. 24: வேப்பூர் செக்கடி காப்புக்காடு வனப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு மானை வேட்டையாடிய 4 பேரை வனத்துறை போலீசார் கைது செய்து இறைச்சியை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை வன அலுவலர் சீனிவாசன், வனவர் ராதா, வன காப்பாளர்கள் சிலம்பரசன், கார்த்திகேயன், ராஜ்குமார், வெங்கடேசன் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு வேப்பூர் செக்கடி காப்புக்காடு கருவட்டம் பாறை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருப்பதை அறிந்த வனத்துறை அதிகாரிகள், அந்தப் பகுதிக்கு சென்று பார்த்தனர்.

அப்போது, 4 நபர்கள் மானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிவிட்டு அதன் இறைச்சியை அறுத்துக் கொண்டு இருந்தனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில் உள் செக்கடி கிராமத்தைச் சேர்ந்த வரதன்(35), புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர்(34), சங்கர்(25), ஏழுமலை(55) ஆகிய 4 பேர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து பைக், நாட்டு துப்பாக்கி மற்றும் மான் கறி ஆகியவற்றை கைப்பற்றி 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

The post துப்பாக்கியால் சுட்டு மான் வேட்டையாடிய 4 பேர் கைது இறைச்சி பறிமுதல் வேப்பூர் செக்கடி காப்புக்காடு வனப்பகுதியில் appeared first on Dinakaran.

Related Stories: