தீர்த்தக்கரை செல்லும் சாலை சீரமைப்பு

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 7: தினகரன் செய்தி எதிரொலியாக கடற்கரைக்கு தீர்த்தமாட செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வெயிலுகந்த விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் மிக விமரிசையாக நடைபெறும். அதில் ஒரு நாள் சித்தி,புத்தி இரு தேவியர்களுடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இந்த வைபவத்தின் தொடர்ச்சியாக பூக்குழி விழா சிறப்பாக நடைபெறும். விழாவின் முன் ஏற்பாடாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மோர்ப்பண்ணை அருகில் உள்ள கடற்கரை சென்று தீர்த்தமாடி வந்த பின்னரே பூக்குழி இறங்குவது வழக்கம்.

அது தவிர திதி கொடுத்தல் மற்றும் பிற பரிகார பூஜைகள் செல்வதற்கும் சுற்று வட்டாரங்களில் உள்ள பொதுமக்கள் இந்த கடற்கரைக்கு வந்து செல்வது காலம் தொட்ட வழக்கமாகவே இன்றளவும் உள்ளது. இந்நிலையில் இந்த தீர்த்தக் கரைக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் அங்கு சென்று வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊராட்சி மன்ற தலைவர் முருக வள்ளிபாலன் முயற்சியால் ஊராட்சி பொது நிதியில் இருந்து சேதமடைந்த சாலையை சீரமைத்தனர். இச்செயல் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post தீர்த்தக்கரை செல்லும் சாலை சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: