திருவொற்றியூர், எண்ணூரில் 2வது நாளாக கடல் சீற்றம்: குடிசைகளை விட்டு மீனவர்கள் வெளியேறினர்

திருவொற்றியூர், நவ.16: திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் நேற்று 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் கடந்த இரு தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை திருவொற்றியூர், எண்ணூர் கடலோரப் பகுதிகளில் காற்று அதிகமாக வீசுவதாலும் கடல் கொந்தளிப்பாகி சீற்றத்துடன் அலைகள் ஆர்ப்பரித்து வருவதால் இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. அவர்கள் படகுகளை பாதுகாப்பாக இடத்தில் நிறுத்தியுள்ளனர். கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்கள் பலர் தங்கள் குடிசைகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். கடல் சீற்றம் காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். வீட்டில் முடங்கி கிடக்கும் மீனவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்க மீன்வளத்துறை மற்றும் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவொற்றியூர், எண்ணூரில் 2வது நாளாக கடல் சீற்றம்: குடிசைகளை விட்டு மீனவர்கள் வெளியேறினர் appeared first on Dinakaran.

Related Stories: