மின் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியாக 380 வழங்க வேண்டும்: மத்திய அமைப்பு கோரிக்கை
சென்னை: தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், மின்வாரிய தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மின்வாரியத்தில் பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு 1.12.15 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு தொடர்பாக முத்தரப்பு ஒப்பந்தம் 22.2.18ல் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ₹250ல் இருந்து ₹380ஆக தினக்கூலியை உயர்த்தி ஒப்பந்தம் காணப்பட்டது. ஆனால், அவர்களுக்கு ₹380 வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக இதை நடவடிக்கைக்கு கொண்டுவர வேண்டும். அவர்களை அடையாளம் காண ஏற்கனவே அமைக்கப்பட்ட குழு போல ஒரு குழு அமைத்து அடையாளம் காண வேண்டும். பிறகு வாரியமே நேரடியாக ₹380 தினக்கூலி வழங்கி, படிப்படியாக கள உதவியாளர் பணியிடத்தில் அமர்த்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஆவினில் 277 கோடி கூடுதல் விற்பனை: நிர்வாகம் அறிவிப்பு
சென்னை: கொரோனா தொற்று காலத்திலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 277 கோடி கூடுதலாக விற்பனை அதிகரித்துள்ளது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆவின் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவினில் கடந்த நிதி ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் பால், பால் உபபொருட்கள் மற்றும் இதர பொருட்களின் விற்பனையால் கூடுதலாக சுமார் 277 கோடி பண பரிவர்த்தனை ஆவினில் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடலூர் வெள்ள பாதிப்புக்கு தீர்வு எங்கே? ராமதாஸ் கேள்வி
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இரு பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். முதலாவது, கடலூர் மாவட்டத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாத சூழலை உருவாக்க வேண்டும். இரண்டாவது, மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.பரவனாற்று நீர் கடலில் எளிதாக கலப்பதை உறுதி செய்வதற்காக ‘அருவா மூக்கு’ திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் வெள்ளநீர் வடிகால்களை அமைக்க வேண்டும். இதற்காக பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்களை கொண்ட குழுவை அமைத்து, அவர்களின் பரிந்துரைகளை பெற்று அதனடிப்படையில் சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
20% இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: கவர்னருக்கு சரத்குமார் வலியுறுத்தல்
சென்னை: சமக தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:தாய்மொழிவழிக் கல்வியை ஊக்குவிக்கவும், தமிழ்மொழியில் பள்ளிக் கல்வி முடித்தவர்களின் எதிர்காலம் சிறக்கவும், இந்த ஆண்டு மார்ச் 16ம்தேதி தமிழக அரசு சட்டப்பேரவையில், தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது. ஆனால், 8 மாதங்கள் கடந்தும் ஆளுநர் இச்சட்ட மசோதாவில் கையெழுத்திடவில்லை. எனவே தாய்மொழி வழிக் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கேட்டுக் கொள்கிறேன். அவர் தாமதம் செய்தால் இச்சட்ட மசோதாவுக்கு அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
விவசாயிகள் போராட்டம் வெற்றிபெற துணை நிற்போம்: விக்கிரமராஜா அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையிலும் விவசாயிகள் கோரிக்கைகள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தன்னுடைய தார்மீக ஆதரவுக்கு என்றும் முன்னுரிமை அளிக்கும். விவசாயிகள் நடத்துகின்ற அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் தமிழகம் தழுவிய அளவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் வெற்றிபெற துணை நிற்போம்.
பாரத் பந்த்துக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள்
சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜ அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களைக் கண்டித்தும், அந்த சட்டங்களை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், டிசம்பர் 8ம் தேதி (இன்று) விவசாய மற்றும் தொழிலாளர் அமைப்புகள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த பொது வேலைநிறுத்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைமை முழு ஆதரவையும் தெரிவித்துள்ளதோடு, போராட்டத்தில் பெருமளவில் தொண்டர்கள் பங்கேற்று பொது வேலைநிறுத்தப்போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும்