திருடனாக மாறிய பட்டதாரி வாலிபர்

கெங்கவல்லி, செப்.12: கெங்கவல்லி அருகே ஏடிஎம்மில் பேட்டரி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால், தொடர் திருட்டில் ஈடுபட்டதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம், கெங்கவல்லி-ஆத்தூர் மெயின்ரோட்டில் உள்ள வங்கி ஏடிஎம்மில் உள்ள பேட்டரிகளை, கடந்த 6ம் தேதி மர்ம நபர் திருடிச் சென்றதாக, வங்கி மேலாளர் ராமச்சந்திரன் கெங்கவல்லி போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் எஸ்ஐ நிர்மலா, பெரியண்ணன் ஆகியோர் வங்கியில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்த போது, வாலிபர் ஒருவர் ஏடிஎம் சென்டரில் யுபிஎஸ்சுக்கு பயன்படுத்தப்படும் 2 பேட்டரிகளை டூவீலரில் திருடி செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து, அவரை பிடிக்க ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையில், அந்த வாலிபர் கெங்கவல்லி பகுதியில் திருட திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. கெங்கவல்லி-ஆத்தூர் மெயின் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட தனிப்படை போலீசாரிடம், அந்த வாலிபர் சிக்கினார்.

விசாரணையில், அவர் ஆத்தூர் அருகே பழனியாபுரி தெற்கு வீதியைச் சேர்ந்த ராயர் மகன் சதீஷ்குமார்(35) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து ஏடிஎம்மில் திருடிய 2 பேட்டரிகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், சதீஷ்குமார் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்துவிட்டு, மும்பையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தில் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வேலை செய்து வந்துள்ளார். அப்போது லட்சக்கணக்கில் பணம் கையாடல் செய்ததாக 4 வருடங்களுக்கு முன், சேலம் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஆத்தூர் நகர ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், சேலத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பேட்டரி திருடியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சிட்பண்ட் கம்பெனியின் ஆத்தூர் கிளையில் உதவி மேனேஜராக பணிபுரிந்து கொண்டே, பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. ஆன்லைன் ரம்மியில் பல லட்சத்தை இழந்ததால், தொடர் திருட்டில் ஈடுபட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருடனாக மாறிய பட்டதாரி வாலிபர் appeared first on Dinakaran.

Related Stories: