திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்திற்கு 6 ஆயிரம் மூட்டை மஞ்சள் வரத்து

திருச்செங்கோடு: திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில், மஞ்சள் ஏலம் துவங்கிய 12 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவாக, நேற்று நடந்த ஏலத்துக்கு விவசாயிகள் 6 ஆயிரம் மூட்டை மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ரூ. 2.50 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மூலம், நாமக்கல், சேலம் மாவட்ட பகுதிகள் கிளைகள் அமைக்கப்பட்டு மஞ்சள், பருத்தி, கொப்பரை, எள் உள்ளிட்டை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் மஞ்சள் ஏலம் துவங்கி 12 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் நேற்று நடந்த ஏலத்துக்கு சேலம், ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர் பாளையம், பரமத்தி வேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விரலி மஞ்சள், கிழங்கு மற்றும் பனங்காளி ரகம் மஞ்சள் என 6 ஆயிரம் மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.

இந்த மஞ்சளை கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னியைில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ. 6,157 முதல் ரூ. 7,529 வரையும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ரூ. 5,655 முதல் ரூ. 6,399 வரையும், பனங்காளி மஞ்சள் குவிண்டால் ரூ. 10,392 முதல் ரூ. 12,009 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 6 ஆயிரம் மூட்டை மஞ்சள் ரூ. 2.50 கோடிக்கு விற்பனையானது. கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் விற்பனை துவங்கி 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நேற்றை ஏலத்துக்கே அதிகபட்சமாக 6 ஆயிரம் மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்திற்கு 6 ஆயிரம் மூட்டை மஞ்சள் வரத்து appeared first on Dinakaran.

Related Stories: