திருக்கோவிலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து ₹10 லட்சம் நகை, பணம் கொள்ளை

திருக்கோவிலூர், செப். 5: திருக்கோவிலூர் அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அப்புசாமி மகன் மணிவாசகம் (45). இவருக்கு திருமணம் நடந்து 2 பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது குடும்பத்தோடு அதே வீட்டில் கடந்த 20 வருடமாக வசித்து வருகிறார். இந்நிலையில் மணிவாசகம் கரும்பு வெட்டுவதற்காக தனது மனைவி கங்காவுடன் நேற்று காலை 6 மணியளவில் விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். 2 பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றுள்ளனர். மேலும் மணிவாசகத்தின் தாயார் 100 நாள் வேலைக்கு செல்வதற்காக காலை 9 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் மணிவாசகம், அவரது மனைவி ஆகிய இருவரும் கரும்பு வெட்டு தொழிலை முடித்துக்கொண்டு மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்கம் இருந்த கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோவும் திறந்து கிடந்துள்ளது. இதனால் மேலும் சந்தேகமடைந்த அவர் பீரோவில் ஆராய்ந்து பார்த்த போது அதிலிருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த மணலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இக்கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ்குமார், காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட கைரேகை பிரிவு உதவி ஆய்வாளர் ராஜவேல், மர்ம நபர்களின் தடயங்களை சேகரித்தார். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மோப்ப நாய் ராக்கி உதவியுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post திருக்கோவிலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து ₹10 லட்சம் நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: