மதுரை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் தனித்துறையை உருவாக்கக் கூடாது என்பது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் அதிகளவில் ஆக்கிரமிப்புகளில் உள்ளதாகவும், இதனால், நீர்நிலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து ெகாண்டே வருவதாவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். நீர்நிலைகள் அழிக்கப்பட்டு, குறைந்து கொண்டே வருவதால் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. இதனால் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களின் குடிநீர் தேவைக்கென தனியாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது. குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை வழங்கக்கூடாது. குறிப்பாக வாக்களிக்கும் உரிமை வழங்கக்கூடாது என்றெல்லாம் உத்தரவிட்டிருந்தது. மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் அக்கறை காட்ட வேண்டும். வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் கூறியிருந்தது.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள கோயில் நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றுதல், பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம், நீர்நிலை ஆக்கிரமிப்பு, அரசு நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் சுமார் 225 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இம்மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில், ‘‘ஆக்கிரமிப்பை அகற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நீர்நிலைகளை மீட்கும் வகையில் நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘ஐகோர்ட்டிற்கு வரும் வழக்குகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான மனுக்கள் அதிகளவில் வருகின்றன. பல வழக்குகளில் ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் வழக்குகள் வந்து கொண்டே இருக்கிறது. அரசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் தான் அதிகளவிலான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதில் நீர்நிலைகளை மீட்க வேண்டியது அவசியம். எனவே, நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், எந்தவித பாரபட்சமும் காட்டக்கூடாது.
ஆக்கிரமிப்பை அகற்றத் தேவையான அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும். ஏனெனில், அரசு சொத்துக்களை பாதுகாப்பது அரசு அதிகாரிகளின் கடமை. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வருவாய்த்துறையினருக்கு முக்கிய பங்கு உண்டு. இவர்களுக்கு அரசுத்துறை சார்ந்த பல்வேறு பணிகள் உள்ளன. ஆனாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படக்கூடாது. எனவே, அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலங்களை மீட்பதற்காக ஏன் தனியாக ஒரு துறையை உருவாக்கக்கூடாது?
இதற்கென தனித்துறை இருந்தால் அவர்களால் பணியை விரைவாக மேற்கொள்ள முடியும். தனித்துறையினரால், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு முறையாக பாதுகாக்க முடியும். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசு நிலங்களை மீட்கும் பணிகளை மேற்கொள்வதற்காக ஏன் தனித்துறையை உருவாக்கக் கூடாது என்பது குறித்து தமிழக அரசுத் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.
* நீர்நிலைகளை மீட்க வேண்டியது அவசியம் என நீதிபதிகள் கருத்து.
* அரசு சொத்துக்களை பாதுகாப்பது அரசு அதிகாரிகளின் கடமை.
* தனித்துறை இருந்தால் அவர்களால் பணியை விரைவாக மேற்கொள்ள முடியும் என்றும் யோசனை.