தாம்பத்தியத்துக்கு கணவர் தகுதியானவர் இல்லை என்று தொடர்ந்த விவாகரத்து வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்: குடும்ப நல நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

 

சென்னை, நவ.5: கணவர் தாம்பத்தியத்துக்கு தகுதியானவர் இல்லை என்று கூறி, விவாகரத்து கோரி பெண் தொடர்ந்த வழக்கை, தாமதமின்றி தினமும் விசாரணை என்ற அடிப்படையில் 2 மாதங்களில் முடித்துவைக்க வேண்டும், என சென்னை குடும்பநல நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடம்பாக்கத்தை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கும், மாம்பலத்தை சேர்ந்த 31 வயது வாலிபருக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி அந்த பெண், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவில் தனது கணவர் தாம்பத்திய உறவுக்கு தகுதியானவர் இல்லை, என்று காரணம் தெரிவித்திருந்தார்.இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரியும், கணவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு கணவர் தொடர்ந்து ஒத்துழைப்பு தராததால் வழக்கை விரைந்து முடிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் அந்த பெண் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில் குறுக்கு விசாரணைக்கு கணவர் ஆஜராக மறுக்கிறார், என்றார். இதையடுத்து, இந்த வழக்கை தினமும் விசாரணை என்ற அடிப்படையில் 2 மாதங்களில் முடித்துவைக்க வேண்டும், என சென்னை குடும்பநல நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

The post தாம்பத்தியத்துக்கு கணவர் தகுதியானவர் இல்லை என்று தொடர்ந்த விவாகரத்து வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்: குடும்ப நல நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: