தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கலை போட்டி

 

ஊட்டி, ஜன.8: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 9,10 ஆகிய தேதிகளில் ஊட்டியில் நடக்கிறது. தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் 2023-24ம் ஆண்டிற்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை (9ம் தேதி) பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 10ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் ஊட்டி அரசு கலை கல்லூரியிலும் நடத்தப்பட உள்ளன.

இப்பேச்சுப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மைக்கல்வி அலுவலகத்தின் வாயிலாக தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து கட்டாயம் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும். கல்லூரி மாணவர்கள் கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாக தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரிடம் கட்டாயம் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு கல்லூரி, பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7000, மூன்றாம் பரிசாக ரூ.5000 என்ற வகையில் பரிசுத்தொகைகள் வழங்க பெற உள்ளன. போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். பிறிதொரு நாளில் மாவட்ட ஆட்சியர் மூலம் பரிசுத்தொகைகள் வழங்கப்படும். சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் இருந்து முத்திரையிட்ட உறைகளில் இருந்து பெறப்படும் தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் நடுவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் எடுத்து அறிவிக்கப்படும். எனவே இப்போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

The post தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கலை போட்டி appeared first on Dinakaran.

Related Stories: