பள்ளிப்பட்டு, பிப். 9: தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில், தண்ணீர் குடித்த 86 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரத்துறையினர் நிறுவனத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே எஸ்.வி.ஜி.புரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆயுத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1000க்கும் மேற்ப்பட்ட பெண்கள் உட்பட மொத்தமாக 1600 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் தொழிலாளர்கள் உணவு அருந்திவிட்டு, நிறுவனத்தில் அமைந்துள்ள சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்ப்பட்டுள்ளது. அடுத்தடுத்து 80க்கும் மேற்ப்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு ஆர்.கே.பேட்டை, வங்னூர், பீரகுப்பம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் திருத்தணி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், மாணிக்கம், எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சி மன்றத் தலைவர் சத்தியராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் பெண்களுக்கு ஆறுதல் கூறி, மருத்துவர்களிடம் விவரங்கள் கேட்டறிந்தனர். ஆயுத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தண்ணீர் குடித்த பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்ப்பட்டதால் நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் தண்ணீர் குடித்த மற்ற தொழிலாளர்களும் அச்சமடைந்து மருத்துவமனைகளில் பரிசோதனைக்கு சென்றனர். நிறுவனத்தில் சுகாதாரத்துறையினர் குடிநீர் பரிசோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
The post தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தண்ணீர் குடித்த 86 பெண்களுக்கு வாந்தி, மயக்கம்: மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை சுகாதாரத்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.