தட்பவெப்ப நிலை மாற்றத்தால் தேனியில் வேகமாக பரவுது மெட்ராஸ் ஐ: சிறுவர், சிறுமியர் அவதி

 

தேனி, நவ. 17: தேனி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட தட்பவெப்ப நிலை மாற்றத்தால் மெட்ராஸ் ஐ பரவி வருகிறது.எனவே, கண்நோய் பரவுவதை தடுக்க மாவட்ட சுகாதாரத் துறை விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. ஒரு நாள் மழை பெய்தால் மறுநாள் மழை பெய்யாமல் வானம் மேகமூட்டத்துட்டத்துடன் காணப்படுகிறது. மற்றொரு நாள் வெயில் தாக்கம் அதிகம் உள்ளது. திடீரென மீண்டும் மழை பெய்கிறது. இதுபோல தொடர்ந்து மாறி, மாறி மழை பெய்து வருகிறது.

இதனால் தேனி மாவட்டத்தில் தட்ப வெட்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வைரஸ் நோய்கள் பரவி வரும்நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காரணமாக ஏற்பட்டுள்ள தட்பவெட்ப நிலை நிலை மாற்றம் காரணமாக தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி உள்ளிட்ட மாவட்டத்தில் பரவலாக வைரஸ்கிருமிகள் மூலமாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோய் பரவி வருகிறது. இரவு தூங்கி எழுந்ததும், காலையில் ஒரு கண்ணில் சிவந்தும், அரிப்பு, எரிச்சல் ஏற்படுகிறது. மறுநாள் இருகண்களும் சிவந்து பெரும் எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நோய் பெரும்பாலும் சிறுவர், சிறுமியர், பெண்களுக்கு அதிகளவில் பரவி வருகிறது.

இதன்காரணமாக கண் மருத்துவமனைகளில் மெட்ராஸ் ஐ நோய்க்கான சிகிச்சைக்காக கூட்டம் அதிகரித்துள்ளது. கண்மருத்துவமனைகளுக்கு சென்று முறைப்படி பரிசோதனை செய்து மருந்துகளை கண்களில் இட்டால் ஓரிரு நாட்களில் கண்நோய் சரியாகி வந்தாலும், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் மருந்துக்கடைகளில் சொட்டு மருந்து வாங்குவதும், இதனால் நோய்பாதிப்பின் தன்மை தெரியாது இடப்படும் சொட்டு மருந்துகளால் தேவையற்ற கண்பாதிப்புகள் ஏற்படும் நிலையும் நிலையும் உருவாகி உள்ளது. எனவே, கண்நோய் பரவுவதை தடுக்க மாவட்ட சுகாதாரத் துறை விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post தட்பவெப்ப நிலை மாற்றத்தால் தேனியில் வேகமாக பரவுது மெட்ராஸ் ஐ: சிறுவர், சிறுமியர் அவதி appeared first on Dinakaran.

Related Stories: