தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை: நகராட்சி தலைவர் தகவல்

 

ராமநாதபுரம், ஜூலை 29: ராமநாதபுரம் நகராட்சியில் காவிரி கூட்டு குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதியில் டேங்கர் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தலைவர் கார்மேகம் தெரிவித்தார். ராமநாதபுரம் நகராட்சி கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ஆணையர் அஜிதா பர்வீன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் மணிகண்டன், காளிதாஸ், எங்களது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் வசதி ஏற்படுத்தித்தித்தர வேண்டும் என்றனர்.

கவுன்சிலர் செல்வராணி பேசுகையில், எனது வார்டில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது, சாலைகளை செப்பனிட வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த தலைவர் கார்மேகம், காவிரி கூட்டு குடிநீர் நகராட்சி பகுதிக்கு வரும் அளவு மிகவும் குறைந்துள்ளது. அதனால் தற்காலிகமாக குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு ரூ.9.50 லட்சம் செலவில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் நகராட்சி பகுதிகளில் ரூ.9.50 லட்சம் செலவில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளவும், டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மகளிர் குழுக்களை ஈடுபடுத்துதல் உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை: நகராட்சி தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: